Wednesday, 22 February 2017

Daily Current Affairs For Competitive Exam - 22nd February

உலகம்:
நாகாலாந்து மாநில புதிய முதல்வராக சுர்ஹோஸ்லி லியிஸ்ட்சு பதவியேற்பு
நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக சுர்ஹோஸ்லி லியிஸ்ட்சு(81) இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பி.பி.ஆசார்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


நாகா மக்கள் முன்னணி தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பழங்குடியினர் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கலைக்க முயன்றபோது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் ஜெலியாங் பதவி விலக வேண்டும் என்று கோரி பழங்குடியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சூழலில் முதல்வர் செலியங் திடீரென ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இந்தியா:
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் வரும் 28-ஆம் தேதி திறப்பு
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (ஹெலிபோர்ட்), தேசியத் தலைநகர் தில்லியில் அடுத்த வாரம் திறக்கப்படவிருக்கிறது.
"பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான பி.பி.சர்மா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வரும் 28-ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கிறார்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது.
மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.
இங்கு, கடந்த ஓராண்டாக சோதனை அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையம் திறக்கப்படுவதன் மூலம் தில்லி விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி விமான நிலைத்தில் தற்போது தினமும் சராசரியாக 40 முதல் 50 ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்கும் சேவைகள் நடைபெறுகின்றன.
பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை, அவசரகால மருத்துவ சேவை, சட்டம்-ஒழுங்கு கண்காணிப்புப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் இந்த நிலையம் பயன்படுத்தப்படும்.
தமிழகம்:
பிரதமர் மோடி நாளை கோவை வருகை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, ஈஷா யோக மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக காவல்துறை உயரதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி - சிவன் சிலை திறப்பு விழா, மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் இருந்து பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.25 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
இதன் பிறகு, விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் விழாவில் ஆதியோகியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். இதன் பிறகு, இரவு 7.55 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் வரும் அவர் இரவு 9 மணி அளவில் புது தில்லி செல்கிறார்.
தமிழ் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 24 பேருக்கு "சாகித்ய அகாதெமி' விருது
2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
சாகித்ய அகாதெமி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் விருதுக்குத் தேர்வானது. இதையொட்டி, தில்லியில் சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கமானி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
அகாதெமி தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமை வகித்து எழுத்தாளர்கள் வண்ணதாசன் (தமிழ்), பிரபா வர்மா (மலையாளம்), பபினேனி சிவசங்கர் (தெலுங்கு), நஸீரா சர்மா (ஹிந்தி) உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கினார். படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
விளையாட்டு :
யு-17 கால்பந்து: இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் லூயிஸ் நோர்டான்
பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த லூயிஸ் நோர்டான் டி மத்தோஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
63 வயதான நோர்டான், போர்ச்சுகல் அணியின் முன்னாள் வீரர் ஆவார். அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பென்பிகா அணி, கினியா பிஸாவ் தேசிய அணி ஆகியவற்றுக்குப் பயிற்சியளித்துள்ளார்.
அவர் தனது ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகளை அடுத்த வாரம் சந்திப்பார் என தெரிகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நிகோலய் ஆடம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது. 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.
மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர்
10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் மிதாலி, கெளர் ஆகியோர் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 804 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மிதாலி ராஜ் 744 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். ஹர்மான்ப்ரீத் கெளர் 574 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தில் உள்ளார்.


No comments:

Post a Comment