Monday, 24 April 2017

Daily Current Affairs For Competitive Exam - 25th April

உலகம் :

இலங்கை ஜெயராஜுக்கு கம்பர் விருது: பிரபல பேச்சாளர்களுக்கும் தமிழக அரசு விருதுகள்
இலங்கை ஜெயராஜுக்கு தமிழக அரசு சார்பில் கம்பர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் விருது வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் வளர்ச்சிக்கான விருதுகள் ஐந்து மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் புதியதாக 55 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

2016-ஆம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள், 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2016-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்துக்கு வழங்கப்படுகிறது. பிற விருதுகள் பெறுவோரின் பெயர் விவரம்:-
கம்பர் விருது - இலங்கை ஜெயராஜ்
கபிலர் விருது - முனைவர் இல.க.அக்னிபுத்திரன்
இளங்கோவடிகள் விருது - நா.நஞ்சுண்டன்
உ.வே.சா. விருது - முதுமுனைவர் ம.அ.வேங்கடகிருஷ்ணன்
சொல்லின் செல்வர் விருது - பி.மணிகண்டன்
ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பர்ட்
உமறுப்புலவர் விருது - முனைவர் தி.மு.அப்துல் காதர்
அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபால்
ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
மொழிபெயர்ப்பாளர் விருது - நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை என்ற முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி.சைதன்யா, சி.முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன்.
2015 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது -
செ.முரளி என்ற செல்வ முரளிக்கு அளிக்கப்படும்.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இறுதிச் சுற்றில் மேக்ரான், மரீன் லெபென் போட்டி
பிரான்ஸ் அதிபரைத் தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றில் ஆன் மார்ச் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மேக்ரான், தேசிய முன்னணிக் கட்சித் தலைவர் மரீன் லெபென் போட்டியிடுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதற்சுற்றுத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களை அவ்விருவரும் பிடித்ததைத் தொடர்ந்து, இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு அவர்கள் தகுதி பெற்றனர்.
முதற்சுற்றில் 11 பேர் போட்டியிட்டனர். இதில் இமானுவல் மேக்ரான் 23.75 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்த மரீன் லெபென் 21.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
முன்னாள் பிரதமர் பிரான்ஸுவா ஃபில்லோன் ஊழல் விவகாரத்தில் சிக்கி மக்கள் ஆதரவை இழந்து 3-ஆம் இடத்தில் வந்தார்.
இந்தியா:
இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.
சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது அணி சேர்த்துள்ளது.

விளையாட்டு:

ஆசிய பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா களமிறங்குகிறார்கள்
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் உஹான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்டோர் களமிறங்குகிறார்கள்.
மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் சிந்து தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் டினார் தியாவை சந்திக்கிறார்.
சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் ஜப்பானின் சயாக்கா சாட்டோவை எதிர்கொள்கிறார்.
உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான சாய்னாவும், சாட்டோவும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சாய்னா 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிய தடகளம்: மன்பிரீத் கெளர் தேசிய சாதனை
ஆசிய கிராண்ட்ப்ரீ (முதல் லெக்) தடகளப் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கெளர் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவின் ஜின்ஹுவா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் மகளிர் குண்டு எறிதலில் மன்பிரீத் கெளர் 18.86 மீ. தூரம் குண்டு எறிந்து தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் தனது பழைய தேசிய சாதனையை (17.96 மீ.) முறியடித்தார்.
இதுதவிர இந்தியாவின் நீரஜ் சோப்ரா (ஆடவர் ஈட்டி எறிதல்), தின்டு லூக்கா (மகளிர் 800 மீ. ஓட்டம்), நீனா வராகில் (மகளிர் நீளம் தாண்டுதல்), ஜின்சன் ஜான்சன் (ஆடவர் 800 மீ. ஓட்டம்) ஆகியோர் வெள்ளியும், தூத்தி சந்த் (மகளிர் 100 மீ. ஓட்டம்), ஓம் பிரகாஷ் கர்ஹானா (ஆடவர் குண்டு எறிதல்) ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.

தமிழகம்:

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுகள்-2015 அறிவிப்பு
2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவர்களின் விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கான விருதாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகம் :

ஆர்-காம், ஏர்செல் இணைப்புக்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைவது தொடர்பான தீர்மானத்துக்கு ஆர்-காம் பங்குதாரர்கள் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தனர்.
இது தொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு அந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ஏர்செல் டிஷ்நெட் வயர்லெஸ் நிறுவனத்துடன் இணைக்க 99.99 பெரும்பான்மையில் முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்தனர் என்று தெரிவித்துள்ளது.
இணைப்புக்குப் பின்னர் இரு நிறுவனங்களுக்கும் சரி சமமான பங்கு இருக்கும். அவ்விரு நிறுவனங்களும் இணையும் நிலையில் நாட்டில் தொலைத் தொடர்பு அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். அதன் உரிமக் காலம் 2033-36 ஆம் ஆண்டுவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment