Tuesday 21 August 2018

22 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்


துருக்கி: அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் இரு நாடுகள் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தரப்பில், "துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் திங்கட்கிழமை வாகனத்தில் வந்த மர்ம  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்திலிருந்து கதவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில்  யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள வெள்ள நிவாரணப் பணிகள் நடப்பதை கண்காணிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
கேரள மாநிலத்தில் நடக்கும் வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக நடக்கிறதா, மக்களுக்கு உதவிகள் சென்று சேர்கிறதா என்பதை நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் சென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிஜி ஆண்டனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் பெய்த மழையினாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடந்த 10 நாட்களில்  234 பேர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் தரப்பில் இருந்து நிதியுதவிகள், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை.
மேலும், வெள்ள நிவாரண நிதியாக கேரள மாநிலம் ரூ.2 ஆயிரம் கோடி கோரிய நிலையில், மத்திய அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது.
கேரளாவுக்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை
கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 223 பேர் பலியாகியுள்ளனர், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். ஆதலால், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை என்று முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 223க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் மீட்புப் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்பு படையினர், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால், மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலத்தின் வெள்ளச்சேதம், அடுத்து செய்யவேண்டிய புனரமைப்பு, கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க இன்று கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது.
விளையாட்டு
சேவாக்கைத் தொட்டு அசாரூதீன் சாதனையை முறியடித்த கோலி: டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.
டெஸ்ட் போட்டியில் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கின் சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, கேப்டனாக இருந்து இங்கிலாந்து அதிக ரன்கள் அடித்த முகமது அசாரூதீனின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 521 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கம் வென்று வினேஷ் போகத் சாதனைதுப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரு வெள்ளி பதக்கங்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார், லக்சய் ஷியோரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இறுதி சுற்றில் தீபக் குமார் 247.7 புள்ளிகள் சேர்த்து 2-வது இடம் பிடித்தார். சீனாவின் ஹாரோன் யங் 249.1 புள்ளிகள் குவித்து ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சீன தைபேவின் ஷாவ்சுவான் லூ 226.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான ரவி குமார் 205.2 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா இறுதி சுற்றில் 186 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
வணிகம்

ஆண்டுகளில் 10 ஆயிரம் கார்: இஸுசு சாதனை
இஸுசு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.
2012-ம் ஆண்டில் தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. ஆனால் 2016-ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் ஆலை அமைத்து உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலை 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ சிட்டி ஆலையில் தற்போது டி மாக்ஸ் வி கிராஸ் எனப்படும் பிக்-அப் வாகனமும் எம்யு-எக்ஸ் என்ற எஸ்யுவி வாகனமும் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தி தொடங்கிய முதல் ஆண்டிலேயே நிறுவனம் தயாரித்த அனைத்து வாகனமும் விற்பனையாகிவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் 12 ஆயிரம் வாகனங்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இவற்றில் 10 ஆயிரம் வாகனங்கள் ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்று நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கென் தகஷிமா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment