Friday, 24 August 2018

24 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்


எஸ்.சி.ஓ. ராணுவப் பயிற்சியில் முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) சார்பில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தபாதுகாப்புப் படையினர் முதன்முறையாக பங்கேற்றுள்ளனர். சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ம் ஆண்டு நிரந்தர உறுப்பினர்களாக இணைந்
தன. இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பு சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் இவ்விரு நாடுகளும் பங்கேற்று வருகின்றன.

அந்த வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் ரஷ்யாவில் பிரத்யேக ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொள்ளும் முதல் ராணுவப் பயிற்சி முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது. தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் உத்திகள் தொடர்பாக இம்முகாமில் பயிற்சிஅளிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுநராக இருந்த என்.என்.வோரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் 13-வது ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்றார்.
அவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளின் மூத்த தலைவர்கள், ராணுவ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கடந்த ஜூன் மாதம் வாபஸ் பெற்றதையடுத்து, அரசு கவிழ்ந்தது. மாநிலத்தில் இப்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
சத்யபால் மாலிக் ஏற்கெனவே பிஹார் ஆளுநராக இருந்தார். உ.பி.யின் மீரட் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்து, 1974-ல் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பாரதிய கிரந்திதள் கட்சி சார்பில் பக்பத் தொகுதி எம்எல்ஏ ஆனார்.

விளையாட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் போபண்ணா -ஷரன் இணை தங்கப் பதக்கம் வென்றது.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில், இந்தியாவின் போபண்ணா - ஷரன் இணை கஜகஸ்தான் இணையான பப்லில் - டெனிஸ் இணையை 6 - 3, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
இதன் மூலம் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை, 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ஷர்துல் விஹான் - ஆடவர் கபடி அரை இறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் 15 வயதான இந்திய வீரர் ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான கொரியாவின் ஷின் ஹைன்வோ 74 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கத்தாரின் அல் மாரி ஹமாத் அலி 53 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரேயாஷி சிங் 6-வது இடமும், வர்ஷா வர்மான் 7-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

வணிகம்


ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனம் ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பினை தொட்டுள்ளது. முதன் முதலில் இந்த இலக்கினை தொட்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.78% ஏற்றம் கண்டது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,268 கோடி உயர்ந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்தமாக ரூ. 8 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இந்தியாவில் ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பினை கடந்த முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாகியுள்ளது.
நேற்று மதியத்துக்கு பின்னர் இதன் சந்தை மதிப்பு ரூ.8,04,247.76 கோடியாக இருந்தது.முன்னதாக ஜூலை 13ம் தேதி ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந் திருந்தது.
சந்தை மதிப்பில் முன்னணியில் உள்ள இரண்டாவது நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது.

No comments:

Post a Comment